விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை ஓரமாக அரவிந்த் என்பவர் புதியதாக பிரியாணி கடை ஒன்றை திறந்துள்ளார். கடையை பிரபலமாக்கவும், அது குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தும்விதமாகவும் கடையின் உரிமையாளர், 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பிரியாணி வழங்கியுள்ளார்.
இச்செய்தி அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து ஏராளான பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டுவந்து பிரியாணி வாங்க கடையின் முன் குவிந்தனர்.
இதனால் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து தகவலறிந்து வந்த தாலுகா காவல் துறையினர் கடையை மூடி கடை உரிமையாளர் அரவிந்தை கைதுசெய்தனர். அப்போது கடையின் முன் பிரியாணி வாங்க குவிந்திருந்தவர்கள் காவல் துறையினர் வருவதைக் கண்டதும் தெறித்து ஓடினர்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளபோது அதிகமான மக்கள் கூட்டத்தினை கூட்டிய காரணத்திற்காக அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... பிரியாணி 5 பைசா, ஆதரவற்ற முதியோராக இருந்தால் இலவசம்!