விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் - திரிமங்கலத்திற்கு இடையே, கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. பின்னர் கட்டப்பட்ட தடுப்பணையில் ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே உடைப்பு ஏற்பட்டது.
இதனால் திரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணை உடைந்து நீர் முற்றிலுமாக வெளியேறியது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. அதிக அளவு நீர்வரத்துத் தொடங்கியதால், தடுப்பணையின் மற்றொரு கதவுப் பகுதியிலும் பெரிய உடைப்பாக மாறியது.
உடைப்பின் காரணமாக நீர்வரத்து விளை நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தடுப்பணையை முழுமையாக வெடிவைத்துத் தகர்க்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கொண்டு நேற்று (நவ. 14) மாலை தடுப்பணைக்கு வெடிவைக்கப்பட்டது.
இருப்பினும் வெடிவைத்தும் தடுப்பணை உடையாமல் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தோல்வியைத் தழுவியது. தடுப்பணையைத் தகர்க்க இன்று (நவ. 15) மீண்டும் வெடிவைக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கிக் குண்டுக்கு இரையான 26 உயிர்கள்.. நீதி விசாரணை கோரி மாவோயிஸ்ட்கள் கடிதம்!