விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 949 ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன மின்கலத்தால் (பேட்டரி) இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கைப்பேசிகள், காதொலி கருவிகளை மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்றுக்கொள்ளாது.
இதில் உள்ள ஷரத்துகள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. இது குறித்து விளக்கமளிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பல்கலைக்கழக வேந்தர், தமிழ்நாடு அரசையும் மீறி மத்திய அரசிடம் நேரிடையாகத் தொடர்புகொண்டு தாங்களே நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அவர் எப்படி பெருக்கி கொள்வார் என்பது தெரியவில்லை. இந்த ஒழுங்கீன நடவடிக்கை குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" என்றார்.