விழுப்புரம்: மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குருசுபராஜபதி அறக்கட்டளை தொடக்க விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜீனன் ஆகியோர் கலந்து கொண்டனர். குருசுபராஜபதி அறக்கட்டளையை எம்.பி. சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.
விழா மேடையில் அவர் பேசியதாவது, "சமுதாயத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சார்ந்த அறக்கட்டளை தொடங்க வேண்டும் என பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் தன்னால் தொடங்க முடியாமல் போனது. அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதால் போதை போன்ற தவறான வழியில் செல்பவர்களை தடுக்கும் நோக்கில் செயல்படுவார்கள் என்ற குறிக்கோளை வரவேற்கிறேன். அறக்கட்டளை தொடங்குவது சுலபம். ஆனால் அதனை சிறப்பாக வழிநடத்துவது கடினம். இந்த அறக்கட்டளை சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர், "தமிழகம் இன்று சூதாட்ட போதை களமாக மாறியுள்ளது. திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகம் முழுவதுமாக போதைக் களமாக உள்ளது. 24 மணி நேரமும் தமிழகத்தில் டாஸ்மாக் திறந்திருக்கிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கிடைக்கிறது.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் விலை மதிப்பில்லாத இளைஞர்களின் வாழ்க்கையை பறித்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்ய அனைத்து கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறைவேக்காட்டுத் தனமாக எதிர்க் கட்சிகளின் ஆலோசனையை முழுமையாக கேட்காமல், சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளாமல், திட்டமிட்டே இந்த சட்டத்தினை கொண்டு வர கூடாது என்பதற்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
அரைவேக்காட்டு தனமாக சட்டம் இயற்றி கவர்னருக்கு அனுப்புவதும், அதை கவர்னர் காலதாமதம் செய்து திருப்பி அனுப்புதும் என இந்த அரசும், கவர்னரும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு "ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அனுப்புவது போன்று அனுப்பு, நான் காலதாமதம் செய்கிறேன்" என்று நாடகம் நடத்தி கொண்டு இருப்பதாக" கூறினார்.
தொடர்ந்து பேசிய எம்.பி. சி.வி.சண்முகம், "ஒரு பக்கம் ஆளுநரை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு ஸ்டாலினும் அவரது மகனும் ஒன்றாக ஆளுநருடன் தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஆளுநரிடம் ஒப்பதல் பெற முடியாமல் அருகதையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் செயல்படுகிறார்.ஆள்வதற்கு திறன் இல்லாமல், சட்ட ஒழுங்கை காப்பாற்றாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திக்கு பணிக்கு வருகிற தொழிலாளர்களை காப்பாற்ற முடியாமல், அதை மறைக்கும் விதமாக திசை திருப்பும் விதமாக திமுக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக ஒரு பொய்யான குற்றஞ்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார்" என விமர்சித்தார்
இதையும் படிங்க: கணவரின் சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்திய பெண் - மனநலன் குன்றிய பெண் மீட்பு!