விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னக்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சுப்பிரமணியன் (70) உடல் நலக்குறைவால் 2010ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இரண்டாவது மனைவி கமலம் (69). கணவருக்கான பென்ஷன் வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் முதல் மனைவி இறந்தபிறகு, என்னை திருமணம் செய்துகொண்டார். 25 ஆண்டுகளாக அவருடன் வசித்து வந்தேன். 2010ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். இதன்பிறகு அவரது பென்ஷன் வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் வழங்காமல் உள்ளனர். வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், பென்சனை வழங்காமல் அரசு அலுவலர்கள் என்னை அலைக்கழித்து வருகின்றனர்.
முதல் மனைவியின் மகன் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், ஓய்வூதியம் வழங்காமல் மறுத்து வருகின்றனர். இதனால் எனது பேத்தியுடன் விழுப்புரத்தில் கஷ்ட ஜீவனம் நடத்திவருகிறேன். தமிழ்நாடு அரசு, எனக்கான வாரிசு ஓய்வூதியத்தை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரை மணி நேரத்தில் முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கிய ஆட்சியர்!