விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகேவுள்ள டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தியின் மகன் கோகுல் (17). இவர் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு 17 வயதுடைய மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்த மாணவரை காவல் துறையினர் கைது செய்து, கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில், கொலை செய்த மாணவரின் சித்தப்பா இளம்வழுதி (38) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொலை சம்பவம் நடந்த அன்று, கொலை குறித்து காவல் துறையினருக்குத் தெரிவிக்காமல், அதனை மறைக்கும் விதமாக, கொலை செய்த மாணவனை இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றித்திரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது மாணவரின் சித்தப்பா இளம்வழுதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறு - கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் - வைரல் வீடியோ