விழுப்புரம்: விழுப்புரம் - புதுவை நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள மிகவும் பிரபலமான வணிக நிறுவனத்தில் பல்பொருள் அங்காடி மற்றும் 5D திரையரங்கம், துணிக்கடை இயங்கி வருகிறது. விழுப்புரத்தின் மையப் பகுதியில் நிறுவனம் இயங்கி வருவதால், தினசரி விழுப்புரம் மட்டுமல்லாது அருகில் உள்ள கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பொதுமக்களும் வருவர். இதனால் தினமும் கூட்ட நெரிசலாகவே காணப்படும்.
இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்து உள்ளார். உடனடியாக நிறுவனம் சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின், துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், டவுன் ஆய்வாளர் காமராஜர் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் இங்கு எந்த வெடிகுண்டும் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று (அக்.17) மீண்டும் அதே நபர், வணிக வளாகத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வந்த தகவலின் அடிப்படையில், மர்ம நபரைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள், தகவல் தொழில்நுட்ப உதவி மற்றும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடித்தனர். பின், போலீசார் விசாரிக்கையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பிரபாகரன் (29) என்பது தெரிய வந்துள்ளது. இவர் புதுச்சேரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் விசாரிக்கையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பிரபல நிறுவனத்திற்கு வந்தபோது, தான் கொண்டு வந்த குறிப்பிட்ட தொகையை தொலைத்து விட்டதால் அதைக் கண்டுபிடித்து தரும்படி நிர்வாகத்திடம் கூறியபோது, நிர்வாகம் தன்னை அலட்சியப்படுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக் கொண்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபாகரனை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!