விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் ஆய்வாளர்கள் செல்வராஜ், ஆனந்தன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், பிரபு, பாஸ்கர் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலில் தொடர்புடையவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிப்பாடி பகுதியில் பதுங்கிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் நால்வரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா (எ) ராக்கி (25), ஷீல்டு (25), கலையரசன் (20), வீரமணி(19) என்பவது தெரியவந்தது. போலீசார் நடத்திய கிடிக்கிப்பிடி விசாரணையில் நால்வரும் இணைந்து விழுப்புரம் மாவட்டம் காணை, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர், போளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை வேளைகளில் சாலைகளில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் ஆயுதங்களை காட்டி நகை, பணம், செல்போன் ஆகியவை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து சிவா, அருணாச்சலம், கலையரசன், வீரமணி ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள், 6 செல்போன்கள், 2 ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.