விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட முற்றிலும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம் ஒரு முன்னோடி, முதன்மை மாவட்டமாகத் திகழ்ந்துவருகிறது. இந்தாண்டு மட்டும் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு இல்லாமல் முதுகலை பட்ட மருத்துவ மேற்படிப்புக்கு 40 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் மூன்றாயிரம் செவிலியர்கள், 500 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரபு, சாரங்கபாணி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.