தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சுந்தர் ராஜன், மாநில சட்ட ஆலோசகர் குமரன் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சிவக்குமார், "தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர் முதல் துணை ஆட்சியர் வரை 33 விழுக்காடு காலியிடம் உள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த காலிபணியிடங்களின் காரணமாக அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு மக்களுக்கான பணியை செய்ய முடியவில்லை.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே தேர்தல் பணிகளை செய்ய முடியும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் அரசாணைப்படி ரூ. 50 லட்சம் உடனே வழங்கவேண்டும். குரூப் டி காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை, நீதித்துறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 20 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.