வேலூர்: வேலூர் மாவட்டம், வள்ளிமலை அருகே பொண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 35 கோடியில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (அக்.18) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பொண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 35 கோடியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
காவிரி - குண்டாறு இணைப்பு தொடர்பாக மாயனூரில் மிகப்பெரிய தடுப்பணையைக் கட்டியிருக்கிறோம். அந்த தடுப்பணையில் இருந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு அரசாங்கத்தினுடைய பணம் இல்லாமல், வெளியில் கடன் வாங்கிதான் அந்தப் பணிகளை செய்து வருகிறோம். மூன்றாவது கால்வாய் வெட்டுவதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க: அக்.31-க்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்கத் திட்டம்; சென்னை மாநகராட்சி கறார்!
தமிழகத்தில் மணல் குவாரிகளை செயல்படவிடாமல் மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் குவாரிகள் செயல்படும், அதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்றார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக இரு மாநிலங்களும் இணைந்து சர்வே எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறித்த கேள்விக்கு, “இது குறித்த முழு விபரம் தெரியாது. அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இது குறித்து பதில் அளிக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிக்கிய நிறுவனம்..! வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!