டெல்லியில் நடைபெற்ற தப்லீக் இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
பாதிப்புக்குள்ளான 6 பேரும் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பாதிப்புக்குள்ளான நபர்கள் வசிக்கும் பகுதிகளான ஆர்.என்.பாளையம், கஸ்பா, கருகம்புதூர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் புழக்கத்திற்கு தடை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அவர்களது குடும்பத்தினர் அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அப்பகுதிகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தூய்மைப்பணியாளர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
இது தொடர்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிக்குபட்ட அனைத்து பகுதிகளும் தடுப்புகள் ஏற்படுத்தி சீல் வைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து வேலூர் மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்கள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் ஆய்வில் 3 மாதத்திற்குத் தேவையான மளிகை பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல், காய்கறிகளும் தடையில்லாமல் கிடைத்து வருகிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகை பொருள்களையும், ஒரு வாரத்திற்த்கு தேவையான காய்கறிகளையும் வாங்கி வைத்துக்கொண்டு முடிந்த அளவுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
வேலூர் மாநகரில் பொது மக்கள் சிலர் ஊரடங்கை முறையாக கடைபிடிக்காததால் 144 தடையை தீவிரப்படுத்தும் விதமாக காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான அக்சீலியம் கல்லூரி ரவுன்டான, காங்கேயநல்லூர், வேலப்பாடி, சங்கரன்பாளையம், ஓட்டேரி, பாகாயம் செல்லும் பாதை எண் : 2 முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகள் தற்காலிகமாக முழுமையாக மூடப்படும்.
பொதுமக்கள் பாதை எண் ஒன்றான காட்பாடி சில்க் மில், விருதம்பட்டு, ஊரிசு கல்லூரி, டோல்கேட், தொரப்பாடி அண்ணா சாலையை மட்டுமே இரண்டு வழி பாதையாக பயன்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் பரவல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கரோனாவை எதிர்க்க இத்தாலியிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?