வேலூர் மாவட்டம் அருகே அம்முண்டி பகுதியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு கரும்பு அரவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு கரும்பு அரவையைத் தொடங்கிவைத்தார். மேலும் சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன், விவசாயிகள், அதிமுகவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன் கூறுகையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 315 டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் 2020 பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் ஆலையின் அரவை தொடர்ந்து நடைபெறும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1987 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 3600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் அரவைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த அறுவை பருவத்தில் நாளொன்றுக்கு 2,500 டன் கரும்பு வீதம் 89 ஆயிரத்து 528 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்படவுள்ளது.
கரும்புச் சக்கையிலிருந்து 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அரசிற்கு 10 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும், மீதமுள்ள 5 மெகாவாட் மின்சாரம் ஆலைக்கு பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!