சீனா நாட்டில் தற்போது கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
குறிப்பாக சீனாவில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு படித்துவரும் மாணவர்கள், இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு முழு மருத்துவ சோதனைக்கு பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தற்போது சீனாவில் இருந்து தங்களது சொந்த ஊரான வேலூருக்கு வந்துள்ளனர். அவர்களை வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை இயக்குநர் சுரேஷ் கூறுகையில், “சீனாவில் இருந்து வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது தாஹிர் வந்துள்ளார். அவரை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அவரை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அவரை அறிவுறுத்தி உள்ளோம். அவர்களின் குடும்பத்தினரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மருத்துவர், சுகாதார ஆய்வாளர் தினமும் அந்த மாணவரை கண்காணித்து வருகின்றனர். இதேபோல் மேலும் சில மாணவர்கள் சீனாவிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற பட்டியலைச் சேகரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சினாவிலிருந்து வரும் மாணவர்களை பரிசோதனை செய்ய வேண்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க - மதுரையிலிருந்து சீனா செல்லும் முகக் கவசம்!