வேலூர்: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. அதன்படி நேற்று (ஜனவரி 19) ஒருநாள் மட்டும் கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு நபர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.
447 பேருக்கு கரோனா பாதிப்பு
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஐந்து பேர் உள்பட 447 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
அவருடன் அலுவலகப் பணிகளில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிறையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை
வேலூர் அமிர்தி மிருகக்காட்சி சாலை மற்றும் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களும் 3 நாள்கள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நோயைத் தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : விழுப்புரத்தில் பெரியார் சிலை முற்றிலுமாக இடிந்து சேதம்