வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் அயாத் (26), இவர் தேநீர் கடை ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி தஸ்லீம் (24), பிரசவத்திற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கழிவறை சுத்தமாக இல்லை எனக் கூறி வார்டிற்கு வெளியில் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு வந்துள்ளார்.
![vellore-sdpi-holds-dharna-for a born baby died because of govt hospital hygiene facility](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-03-sdpi-protest-at-gh-hospital-vis-scr-pic-tn10018_29082020151623_2908f_1598694383_15.jpg)
அப்போது எதிர்பாராதவிதமாக தஸ்லீமிற்கு வலி ஏற்பட்டு கழிவறை வாசலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவர்களிடம் எடுத்துச் சென்று கொடுத்தபோது இரண்டு நாள்கள் குழந்தையை வென்டிலேட்டரில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
![vellore-sdpi-holds-dharna-for a born baby died because of govt hospital hygiene facility](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-03-sdpi-protest-at-gh-hospital-vis-scr-pic-tn10018_29082020151623_2908f_1598694383_261.jpg)
ஆகவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய படுக்கை வசதியும், குழந்தைக்கு உரிய சிகிச்சையும் அளிக்காததால்தான் குழந்தை இறந்ததாக குற்றஞ்சாட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு இதற்கு அந்த மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஒன்றிற்கு இருமுறை ஓபி (OP) சீட்டு போட்டுள்ளதாகவும் கூறி நேற்று பாதிக்கப்பட்ட தம்பதியினருடன் எஸ்டிபிஐ கட்சியினர் அரசு மருத்துவமனை மகப்பேறு கட்டடம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![vellore-sdpi-holds-dharna-for a born baby died because of govt hospital hygiene facility](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-03-sdpi-protest-at-gh-hospital-vis-scr-pic-tn10018_29082020151623_2908f_1598694383_298.jpg)
இதனையடுத்து சம்பவ இடைத்திற்கு வந்த காவல் துறையினர், மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட தம்பதியினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "மகப்பேறு பிரிவில் படுக்கை பற்றாக்குறை என எதுவுமில்லை. தற்போது கரோனா தாக்கம் உள்ளதால் மாவட்டம் முழுவதுமிருந்து பிரசவத்திற்காக இங்கு வருகிறார்கள். அவர்களது தேவைக்கேற்ப படுக்கை வசதி செய்து தரப்படுகிறது.
மேலும் தஸ்லீம் என்ற பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டபோது, இவருடன் பெண் உதவியாளர்கள் யாரும் வரவில்லை. அவரது கணவர் மட்டுமே வந்திருந்தார்.
மகப்பேறு பிரிவுக்குள் ஆண்கள் யாரும் அனுமதி கிடையாது. ஆகவே அந்தப் பெண் கணவரைப் பார்க்க வெளியே சென்றபோது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மிகவும் எடை குறைவாக இருந்ததால் இரண்டு நாள்கள் வென்டிலேட்டரில் வைத்திருந்தோம், இருந்தபோதும் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது" எனக் கூறியது.
மேலும் இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் செல்வியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது இது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் - தாயும் சேயும் நலம்!