வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூரை அடுத்து அமைந்துள்ளது, புலிமேடு ஊராட்சி. இக்கிராமத்தை ஒட்டிய அடர்ந்த மலைகளின் நடுவே வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பருவ மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும். அச்சமயத்தில் காட்டாற்றுக்கு இடையே உள்ள ஒரு பகுதியில் மட்டும் சிறு நீர்வீழ்ச்சியைப் போல காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட தொடர் மழை நின்றுவிட்டதால் இந்த பகுதியில் தற்போது நீர் குறைந்து காணப்படுகிறது.
இந்த வனப்பகுதியானது, வேலூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாறு இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான கொட்டும் காட்டாற்று நீர் வீழ்ச்சியைக் காணவும், விளையாடவும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், முதியோர்கள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் குடும்பத்தோடு பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.
வெயிலுக்கு பெயர் பெற்ற வேலூரில், இயற்கை சுற்றுலா தளங்கள் குறைந்த வேலூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக இயற்கை சுற்றுலா தளத்தை தேடி அலையும் மக்களுக்கு பெரும் வரமாக அமைந்துள்ளது, இந்த புலிமேடு காட்டாற்று நீர்வீழ்ச்சி. மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, வேண்டிய பாதுகாப்பு அம்சங்களுடன் இப்பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
இதையும் படிங்க: வாழ்.. தனிமையை இனிமையாக்கிய முதியவர்கள்.!