வேலூர்: திறப்புவிழா ஆஃபராக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்த பிரியாணி கடையில் கூட்டம் குவிந்ததால், கடையை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். கடையில் கூடிய கூட்டத்தைக் கலைத்து போலீசார் கடையை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் நேற்று புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று தனது கடையின் திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மக்கள் பிரியாணி வாங்க கடை முன் குவிந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்த படியும், கையால் முகத்தை மறைத்தபடியும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த வழியாக சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீரென இறங்கி கடையில் ஆய்வு செய்தார். அப்போது தங்கள் கடையை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதி படாதவாறு நிழல் குடைகளோ, இருக்கை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வாடிக்கையாளர்களை கடும் அவதிக்கு உள்ளாக்குவதையும் கண்டார்.
பின் இந்த நிலைமையைக் கூறி உடனடியாக பொதுமக்களைக் கலைந்து செல்லும் படியும், பிரியாணி கடையை மூடும் படியும், மக்களைக் கலைந்து செல்லும் படியும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் புதியதாகத் திறக்கப்பட்ட பிரியாணி கடை மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றினைப் பெறாமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து கடை முன்பு குவிக்கப்பட்ட காவல் துறையினர், சலுகை விலை பிரியாணியை வாங்க குவிந்திருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களை திருப்பி அனுப்பினர். இதனால் பிரியாணி வாங்கி வந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் முறையான ஏற்பாடு மற்றும் மாநகராட்சியின் தொழில் உரிமம் சான்று பெறாத கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், முறையான தொழில் உரிமம் சான்றிதழ் பெறாததால் கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதிரடி ஆஃபரை வெளியிட்ட பிரியாணி கடை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கடை மூடப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டவே முடியாது - அமைச்சர் துரைமுருகன்!