வேலூர் மாவட்டம் சிக்கனாங்குப்பம் ஊராட்சி புதுமனைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று ஆழ்துளை குடிநீர் குழாய்கள் சில மாதங்களுக்கு முன் பழுதாகின. இதனால் அக்கிராம மக்களுக்கு முறையாகக் குடிநீர் கிடைக்கவில்லை. இதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது ஆழ்துளை குழாய்களைப் பழுதுபார்க்காமல் காலம் தாழ்த்திவந்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று வாணியம்பாடி - சிக்கனாங்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி - சிக்கனாங்குப்பம் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி காவல் துறையினர் நாட்றம்பள்ளி ஊரக வளர்ச்சி அலுவலர்கள், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பழுதடைந்த ஆழ்துளை குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தனர். உறுதியளித்த பின்னர் பொது மக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது வேலூரிலிருந்துதான் குடிநீர் சென்றது. சொந்த மாவட்ட மக்களுக்குக் குடிநீர் அளிக்காமல் இருப்பது அம்மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.