வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சம்மந்தி பகுதியில் ஒரே மதத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் அந்த கிராமத்திற்கு மாற்றொரு மதத்தைச் சேர்ந்த நபர், அப்பகுதியில் இடத்தை வாங்கி குடிசை அமைத்து வெளியூர் நபர்களை அழைத்து வந்து, அவர் சார்ந்த மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் கூடம் நடத்துவதாகவும், இதனால் அவ்வப்போது சலசலப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்தக் கூடத்திற்கு எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இக்குப்பை தொட்டியை அகற்றுமாறு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் பல மாதங்களாக இந்த இடத்தில்தான் குப்பைத் தொட்டி இருந்துள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து அந்தக் கூடத்தின் நிர்வாகி ஆமோஸ் என்பவர் வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதி மக்கள் ஐந்து பேரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தனிநபர் செயலை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தனிநபர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை விடுதலை செய்யும் வரை மறியலை கைவிடமாட்டோம் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிகளவு காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.