வேலூர்: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சி.சுப்பிரமணியம். இவர் வேலூரில் நகரமைப்பு உதவி இயக்குநராகவும், அவ்வப்போது துணை இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அரசு அதிகாரியாவார். இந்த இருவருக்கும் டிராவிட் என்ற மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார்.
உதவி இயக்குநரான சுப்பிரமணியம் தான் பனியில் இருக்கும்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டில் படிக்கும் தனது மகனுக்கு அதிகளவில் பணம் அனுப்பியதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு ரகசிய புகார்கள் வந்தன.
அதன் பேரில் வேலூர், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுப்பிரமணியத்தின் மகன் டிராவிட் சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் மற்றும் நிதித்துறை படிப்பை மேற்கொண்டதும், அதற்காக 2016 முதல் 2018 வரை அதிகளவில் பணம் செலவு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்காக வேலூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 3.04.2016 முதல் 12.02.2019 வரை சுப்பிரமணியம் 1 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 700 ரூபாய் பணம் டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர IMPS, NEFT, மற்றும் மொபைல் பேங்கிங் மூலமும் பணம் அனுப்பப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அந்த நேரத்தில் அவருக்கான சொத்து மதிப்பு வெறும் 22.27 லட்சம் மட்டுமே. ஆனால் அவர் 1.80 கோடி செலவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் தனது வருவாயை விட 1,120 மடங்கு வருமானம் குவித்து இருப்பது உறுதியானது. இதையடுத்து உதவி இயக்குநர் சுப்பிரமணியம் மீது வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வருவாயை விட அதிக வருமானம் ஈட்டிய புகாரில், சுப்பிரமணியம் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படவில்லை.
வேலூர் நகரமைப்பு திட்டப்பிரிவில் பணியாற்றிய அதிகாரி வெளிநாட்டில் படித்த மகனுக்கு அதிகளவில் பணம் அனுப்பியதோடு வருவாயை விட 1,120 மடங்கு வருமானம் ஈட்டிய வழக்கில் சிக்கி, பணி ஓய்வு பெற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சக அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதியா? தமிழக அரசு மரபு மீறல்! - செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு