வேலூர்: கடந்த 9 ஆண்டுக்கால மத்திய பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளைக் காட்டிலும் முதலிடத்தில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் அடைந்திருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்தார்.
வேலூரில் இன்று மாலை மத்திய பாஜக ஆட்சியில் 9 ஆண்டுக்கால சாதனை பற்றி வி.கே.சிங் விளக்கினார். அப்போது பேசிய அவர், “நாட்டின் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, அரசியல் வளர்ச்சி ஆகியவற்றில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டின் தயாரிப்புகளைக் கொண்டே நம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
இது போன்ற வளர்ச்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை. கரோனா தொற்று காலத்திலும் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தது. 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்து உள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு.. முதலமைச்சர் செய்வாரா" - எச்.ராஜா கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர் “ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மூன்று கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதே போன்று ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பைப்புகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள் கொண்டுவரப்பட்டு ஒரு நாளைக்குப் புதிதாக 38 கிலோமீட்டர் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றது.சாலை வசதியில் உலகத்திலே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்தில் வரும் என்று”, கூறினார்.
2014 ஆம் ஆண்டு வெறும் 74 விமான நிலையங்களே இருந்தது, இப்பொழுது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. உலகத்திலே இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா இடம் வகிக்கிறது. இந்தியாவிலிருந்து உலகமெங்கும் சென்று சாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன”, எனக் கூறினார்.
மேலும், “வேலூரில் உள்ள சிறிய விமான நிலையம் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது, நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகள் நவீன மயமாக்கப்பட்டு வருவதாகவும்”, அவர் கூறினார்.
இதையும் படிங்க: மெல்ல கற்கும் மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பு..பள்ளி முற்றுகை..கல்வி அலுவலர் அறிவுரை..