வேலூர்: வேலூரில் கம்பிலோடு இறக்கிவிட்டு, பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த லாரியை மேல்மொணவூர் அருகே பெருமாள் நகர் கீர்த்தி ஷூ கம்பெனி எதிரில், லாரி ஓட்டுநர் நிறுத்தி உள்ளார்.
அப்போது திருவலம் குப்பிரெட்டி தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஜய் கீர்த்தி, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விபத்தில் அஜய் கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் உடனடியாக ராஜசேகரை மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அவரும் துரஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லாரியை நிறுத்தி விட்டு சென்ற திருச்சி பகுதி சேர்ந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்த 2 இளைஞர்களின் உடல்களும், உடற்கூராய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரியில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சீனாவால் தமிழகத்திற்கு வரும் சிக்கல்.. இலங்கை உதவுகிறதா? - ராமதாஸ் கண்டனம்!