வேலூர்: காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டுர், நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று (நவ.19) இரவு குழந்தையின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்ததாகவும், அந்த சமயத்தில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த குழந்தை வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த வாளியில் இருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதனை யாரும் கவனிக்காத நிலையில், எதிர்பாராத விதமாக குழந்தை தவறி வாலியில் உள்ள தண்ணீரில் விழுந்து, மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த தாய், தனது மகளைத் தேடிய போது குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்னர் பதறியடித்து குழந்தையை மீட்டு பார்த்தபோது உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் தனது மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்த சப்தம் அருகில் இருந்தோர் வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளர். மேலும் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் கோர விபத்து: ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், திவ்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சதிஷ் தற்போது வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (நவ.19) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நாச்சார்குப்பம் பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது 5 வயது மகனை, அவரது பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு டிராக்டர் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சிறுவன் டிராக்டரின் களை எடுக்கும் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்னா யானை உயிரிழப்பு..! வனத்துறையினர் தீவிர விசாரணை..