அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் எதிரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நீண்ட போராட்டத்திற்கு பிறகு நமக்கு பரிசு பெட்டிச் சின்னம் கிடைத்துள்ளது. இது ஒரு சரித்திர சாதனை ஆகும். இந்திய வரலாற்றிலேயே சுயேச்சையாக போட்டியிடும் ஒரு கட்சிக்கு 40 தொகுதிக்கும் ஒரே சின்னம் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை.
எப்படி ஆர் கே நகரில் அம்மாவின் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட என்னை வரலாற்று சாதனையாக வெற்றி பெற செய்தீர்களோ அதேபோல் உங்கள் பிள்ளையான டிடிவியின் வேட்பாளர்களை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும். இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைந்துள்ளன. தேசிய கட்சிகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது காவிரி பிரச்னையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்னையாக இருந்தாலும் சரி, பாலாறு பிரச்னையாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு தான் வருகிறது, காரணம் அவர்களுக்கு இங்கே செல்வாக்கு இல்லை, அதனால் இங்கே எம்.எல்.ஏ எம்.பி ஆக முடியுமா என்று பார்க்கிறார்கள்.
அரசியல் ரீதியாக ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறார்கள். அம்மா உயிரோடு இருந்தவரை தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை. ஜி.எஸ்.டி கொண்டு வரும்போது ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மோடி தான் எங்கள் டாடி என்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி திருவண்ணாமலையில் பேசுகையில், "நான் ஒரு விவசாயி என்கிறார். ஆனால் எட்டு வழி சாலைத் திட்டத்தில் ஏழை விவசயிகள் நிலத்தை பறித்து விட்டு நான் விவசாயி என்கிறார் நல்ல வேளை நீதிமன்றம் தலையிட்டதால் விவசாயிகள் தப்பித்து விட்டனர். இல்லையென்றால் நம் தலை மீதே எட்டு வழிச்சாலை போட்டிருப்பார்கள். நேற்றுவரை இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ விமர்சித்து வந்த பாமக இன்று அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளனர்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " சிறைக்கு பயந்து மோடியுடன் எடப்பாடி கூட்டணி அமைத்துள்ளார், நாங்கள் யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டோம் " என தெரிவித்தார்.