வேலூர்: வேலூரில் உள்ள ஏழு ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(அக் 12) ஏழு மையங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதனால், வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளப் பகுதியில் முகவர்கள், வேட்பாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலையில் வாக்கு எண்ணும் மையம்
இந்த வாக்கு எண்ணிக்கை மையம் ஆனது, வேலூரில் திருப்பதி தேவஸ்தானம் கிளை அமைந்துள்ள சந்திப்பிலிருந்து ஆரணி சாலை, வேலூர் மத்திய சிறைக்குச் செல்லும் சாலை என இரண்டு பிராதன சாலைகள் வழியாக அடையலாம்.
இதில் வேலூர் மத்திய சிறைக்கு செல்லக்கூடிய சாலை தான், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய பெரும்பாலான நோயாளிகளும், பணியாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்துகளை சரிசெய்வதாக தகவல்
இந்நிலையில், வேலூர் திருப்பதி தேவஸ்தானம் கிளை அமைந்துள்ள சந்திப்புப் பகுதியிலோ அல்லது வேலூர் மத்திய சிறையை அடையும் சந்திப்புப் பகுதியிலா, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற முறையான அறிவிப்பு இல்லை.
இதனால், அங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் பயணித்த பிறகு, மீண்டும் மற்றுமொரு மாற்றுப்பாதையில் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
முறையான அறிவிப்புகள் இல்லாததே வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை அளித்ததாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து வேலூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர், ஆரணி சாலை வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
விரைவில் போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'சீமராஜா' சினிமா சொன்ன வளரியின் கதை: அதற்கு வலுசேர்த்த நிஜ 'நடுகல்'