ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் (46), ராமன்(40), வரதப்பன்(40) ஆகிய மூவரும் டிப்பர் லாரியில், அணைகட்டு அடுத்த அப்புக்கல் பகுதியை சேர்ந்த தனியார் கோழிப்பண்ணைக்கு கல்தூண்களை ஏற்றி வந்தனர்.
அணைகட்டு அருகே ஏரிகொல்லை என்ற பகுதியில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்தவர்கள் மீது கற்கள் சரிந்து விழுந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைகட்டு காவல் துறையினர் 3 பேருடைய உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக லோடு ஆட்டோவில் ஏற்றி அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் முறையாக அமரர் ஊர்தி வரவழைத்து எடுத்து செல்லாமல், லோடு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
108 ஆம்புலன்சுகளில் உயிரிழந்தவர்களை ஏற்றக்கூடாது என்பதற்காக தான், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.