வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், 'பல பேரின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க முடிவு எடுத்ததை வரவேற்கிறேன். தலைக்கவசம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். காவல் துறை சொல்வதை மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக விரோதிகள் தான் காவல் துறையை எதிர்ப்பார்கள். தற்போது தொடங்கப்பட்டுள்ள மையம் காவல் துறையினருக்கு உற்ற நண்பனாக இருக்கும்' எனப் பேசினார்.
மேலும், குடியரசுத்தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பட்டியலின அல்லது பழங்குடியினர் முன்நிறுத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, 'அன்றைக்கு கருணாநிதி கை காட்டியவரே, கருணாநிதியால் அறிவிக்கப்பட்டவரே ஜனாதிபதியாக நியமித்தார்கள்.
இந்த முறை பட்டியலினத்தவரே வந்தால் தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன்' என்றார்.
மேலும் காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு தனிநபர் கோயில் கட்டுவது குறித்து கேட்டதற்கு, 'குஷ்பூவுக்கே கோயில் கட்டும் போது எம்.ஜி.ஆருக்கு கட்டக்கூடாதா? கட்டுவது அவரவர் விருப்பம். அதிமுக பெயரில் மட்டும் திராவிடத்தை வைத்துள்ளது. செயலில் அல்ல. திராவிட சித்தாந்தத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி திமுக தான்' என்றார்.
மேலும், கட்டுப்பட்டு அறை குறித்து அலுவலர்கள் கூறுகையில், 'கட்டுப்பாட்டு அறையில் மாநகரில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 500 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பார்க்கலாம். பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் தானாக வாகன எண் பதிவு செய்யும் வசதி, முகத்தைப் பதிவு செய்யும் நவீன வசதி உள்ளது.
ரவுண்டானா பகுதிகளில் 360 டிகிரியில் படம்பிடிக்கும் கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. இதனை 24 மணி நேரமும் காவல் துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பார்கள். இதனால் பெருமளவு குற்றச்சம்பவங்களைத் தடுக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு