சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சூரிய கிரகண நிகழ்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சூரிய கிரகணத்தை தெளிவாகப் பார்ப்பதற்காக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம் வேலூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால் தங்களால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியுமா என்று பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இருப்பினும் மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் ஒரு சிலர் சூரிய கிரகணத்தை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூரில் பொதுமக்கள் சிலர் சாதாரணமாக வீட்டில் உள்ள எக்ஸ்ரே அட்டை மூலம் கிரகணத்தை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து எக்ஸ்-ரே அட்டையைக் கொண்டு வானை நோக்கி சூரிய கிரகணத்தை பார்த்தனர். அதில் தெளிவாக கிரகணம் நிகழ்வு தெரிந்தது, இதைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் எக்ஸ்-ரே அட்டைகள் மூலம் சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். எக்ஸ்-ரே அட்டை மூலம் பார்க்கும் போது சூரியனைச் சுற்றி உள்ள நெருப்பு வளையம் மிகத் தெளிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீல வானை செக்கச் சிவக்க வைக்கும் சூரிய கிரகணம்: தெரிந்து கொள்வோம்!