வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் ஹேமமாலினி என்பவர் டெட் தேர்வு எழுதாமலேயே முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி வழக்கறிஞர் சுரேந்திர குமார் என்பவர் ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆசிரியை ஹேமமாலினி முறைகேடாக பணியில் சேர்ந்தது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர் ஹேமமாலினி, அவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சாம்பசிவம், ஆம்பூர் இந்து கல்வி சங்க உதவித் தலைவர் சுரேஷ்பாபு, திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக பதிவு எழுத்தர் பரமேஸ்வரி, சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அலுவலக நேர்முக உதவியாளர் கிரினிவாசன் உள்ளிட்ட ஏழு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையின் இறுதியில்தான் ஆசிரியை முறைகேடு செய்தாரா என்பது குறித்து தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.