வேலூர்: உழவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் பொருளாதார விடுதலைப் போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் உயிரிழந்த 52 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேலூரில் நேற்று (ஜூலை 5) உழவர் தின விவசாயிகள் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியானது தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மதன், பூவேந்தன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநிலத் தலைவர் சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு முயல்வதை கண்டிக்கின்றோம். அந்த திட்டத்தை கைவிடக் கோரியும், அதற்கு ஒப்புதல் அளிக்காமலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் பெற்ற மத்திய கால, நீண்ட கால கடன்கள் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை. 2016ஆம் ஆண்டு பெற்ற குறுகிய கால கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்றி, விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக மாற்றி இருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் இந்த கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தீர்ப்பு வழங்கியது. ஆனால், தமிழ்நாடு அரசு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இன்று விவசாயிகளை கடனாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
எனவே, விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டி கோரிக்கை விடுக்கிறோம். 600 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட தென்பண்ணை பாலாறு இணைப்புத் திட்டம் கிடப்பிலே இருக்கிறது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும்.
விவசாயிகளுக்கு பாகுபாடின்றி சொட்டு நீர் பாசனத்திற்கு உதவிடவும், வனவிலங்குகள் விவசாயிகளின் விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்வதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அதற்கான நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலையை அறிவித்தார்.
ஆனால், அதற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை 8 மணி நேரமாக குறைத்தார். ஆனால், தற்போது விவசாயிகள் நில எடுப்புச் சட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் விவசாயிகளை தெருவில் நிறுத்தக் கூடிய நிலைக்குத் தள்ளியுள்ளார். எனவே, விவசாயிகளின் விளைநிலங்களை அரசு கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
நிலங்களை தனியாருக்கு கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் நிலங்கள் தேசிய விரைவு சாலை பணிக்கு கையபடுத்தப்பட்டவைகளுக்கு இழப்பீடு விரைவாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை மாதம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? அண்ணாமலை யார்? - பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிருப்தி