வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.2) மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அணைக்கட்டு அருகே உள்ள புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம்மாள் (80) என்ற மூதாட்டி, அவருடைய இளைய மகன் சம்பத் உடன் வந்துள்ளார்.
அப்போது பெட்ரோல் கேனையும் வைத்துக் கொண்டே வந்துள்ளார். இதனைக் கண்ட காவல்துறையினர் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மூதாட்டியும் அவரது இளைய மகனும், கூட்ட அரங்கின் முன்பு தரையில் அமர்ந்து அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மூதாட்டியுடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, “எனக்கு 3 மகன் ஒரு மகள் உள்ளனர். எனக்கு சொந்தமான நிலத்தை மூத்த மகன் கிருஷ்ணன் எனக்கு தெரியாமல் பத்திரப்பதிவு செய்து கொண்டான். இதனால் மற்ற பிள்ளைகளுக்கு இடத்தை பிரித்துக் கொடுக்க முடியவில்லை.
எனவே அவரிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மூதாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனையடுத்து புகார் அளித்த மூதாட்டியிடம் மூத்த மகன் செய்துள்ள நில பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் லிஃப்டில் சிக்கிய பொதுமக்கள்.. அடுத்தது என்ன?