வேலூர்: இயற்கை முறையில் விவசாயம் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருங்கிணைந்த இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்து பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறார் வேலூர் காட்பாடியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன். 67 வயதான இவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று 2012ஆம் ஆண்டு காளாம்பட்டு பகுதியில் மூன்று ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கினார். அதனை, இயற்கை விவசாய முறையில் தோட்டமாக மாற்றி 'அறிவுத்தோட்டம்' என்று பெயரிட்டு பத்து ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றிய இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்பு முழுமையாக இயற்கை விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். காய் கனி வகைகள், பூக்கள் உள்ளிட்டவை மூலம் ஆண்டு தோரும் சுமார் 2 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார். கோழி பண்ணை அமைத்து அதன் மூலமாகவும் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளார்.
சோனாலிகா (Sonalika Corporate Social Responsibility activity) என்ற தனியார் அமைப்பு இந்திய அளவில் சிறந்த 15 விவசாயிகளைத் தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்துவருகிறது. 2021ஆம் ஆண்டிற்கான விருதினை செந்தமிழ் செல்வனிற்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
விவசாயம் லாபகரமானது
இது குறித்து செந்தமிழ்செல்வன் கூறும்போது, "10 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நிலத்தை வாங்கும் போது தரிசு நிலமாக கிடந்தது. தற்போது அது ஒரு பூஞ்சோலையாக காட்சியளிக்கிறது. இன்று விவசாயம் கடினமான தொழில் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
பலர் விவசாயமே வேண்டாம் என மாற்று வேலைக்கு செல்கின்றனர். விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியும் என்பதனை நாம் நிரூபித்து, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கடந்த 40 ஆண்டு அனுபவங்களை வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதில், வெற்றி கண்டு விவசாயம் லாபகரமானது தான் என்பதனை நிரூபித்துள்ளோம்.
ரசாயனம் பயன்பாட்டின்றி விவசாயம்
இயற்கை விவசாயத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். ஆனால், அது அப்படி அல்ல. ரசாயன உரங்களை தவிர்க்கிறோம் என்பது ஒரு அடிப்படை அம்சம். இயற்கைக்கு அழிவின்றி இயற்கையினுடைய பயன்பாட்டினை தக்க வைத்துக் கொள்வது தான் இயற்கை விவசாயம்.
தற்சார்பு விவசாயம்
கழிவுகளைக் கொண்டே உரங்களை தயார் செய்து கொள்கிறோம். இப்படியாக தன்னுடைய நிலத்திலேயே உரத்தை உற்பத்தி செய்து கொள்வது தான் இயற்கையான தற்சார்பு விவசாயமாக அமைகிறது. இதனால் நம்முடைய தேவைக்கு நாம் உற்பத்தி செய்துகொள்ளலாம்.
ஒரே வகை பயிரை பயிரிட வேண்டாம்
ஒரே வகையான பயிரை மட்டும் உற்பத்தி செய்யாமல் ஏராமான பயிர்களை பயிரிட வேண்டும். நெற்பயிர் பிரதானமாக இருந்தால், பயிரிட்ட இடம் போக காலியாக இருக்கக்கூடிய இடங்களில் வேறு வகையான பயிர்களை பயிரிட வேண்டும்.
ஒருங்கிணைந்த விவசாய முறை
விவசாயம் சார்ந்த பண்ணை தொழில்களான கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்க வேண்டும். இவைகளெல்லாம் விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. விவசாயத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அவற்றை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
விவசாயி வியாபாரியாகவும் இருக்க வேண்டும்
உலகின் எந்த ஒரு மூலையிலும் தன்னுடைய பொருளை விற்பனை செய்ய முடியும் என்ற விஷயத்தை விவசாயிகள் முதலில் உள்வாங்க வேண்டும். ஒரு கடும் உழைப்பாளியாக மட்டுமில்லாமல் ஒரு வியாபாரியாகவும் மாற வேண்டும். உலக சந்தையில் இருந்து உள்ளூர் சந்தையில் வரை தன்னுடைய பொருளுக்கு என்ன மதிப்பு உள்ளது, என்ன விலைக்கு விற்க முடியும், என்கின்றவற்றை விவசாயிகள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் அவசியம் வரவேண்டும்
இளைஞர்களுக்கு விவசாயத்தில் அதிகமான பணிகள் உள்ளன. இன்னும் பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும். விவசாயத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் என்பது நம் நாட்டிற்கு வரப்பிரசாதமாக உள்ளது. வீழ்ந்து கிடக்கக்கூடிய இந்திய பொருளாதாரத்தை புனரமைக்கக்கூடிய மாபெரும் சக்தி இந்த இயற்கை விவசாயம் தான்" என்றார்.
மூலிகை பற்றி தெரியுமா
அவரது மனைவி குணசுந்தரி கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளாக அறிவு தோட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இங்கு பல வகையான செடிகள் உள்ளன. இவையனைத்தும் எங்களது உறவினர்களைப் போன்றது. பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் இந்த அறிவுத்தோட்டத்தை பார்வையிட வருகின்றனர்.
இங்கு பல வகையான மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிட்டுள்ளோம். அனைவரும் மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது ஆசை" என்றார்.
இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி - களையிழந்த பட்டாசு வியாபாரம்