முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், வாட்ஸ்அப் காணொலி அழைப்பு மூலம் தனது தாய், உறவினர்களுடன் பேச அனுமதிக்கக் கோரி கடந்த 24 நாள்களாகச் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் நேற்று (டிச. 15) முருகனின் உடல்நிலையை வேலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பரிசோதித்ததாகவும், அப்போது முருகன் உடல்நிலை சோர்வுற்று இருப்பதால் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் சிறைத் துறைக்குப் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரவு சுமார் 7.15 மணியளவில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலிருந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்தியை பலத்த காவல் துறை பாதுகாப்புடன் முருகன் அழைத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஈசிஜி, சர்க்கரை போன்ற உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அனைத்தும் இயல்பாக இருந்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முருகனுக்கு ஓஆர்எஸ் கரைசலும் கொடுத்தனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சிறையில் உள்ள முருகன், ஆன்மிகத்தின் மீது கொண்ட விருப்பத்தால் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் காவி உடை அணிந்து சிறை வளாகத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவந்துள்ளார். இதுவரை சிறைக் கைதிகள் உடையை அணிந்தது இல்லை.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, முருகனின் சிறை அறையை சோதனை செய்ச பெண் சிறைக் காவலர் உள்ளிட்ட காவலர்களை அவதூறாகப் பேசியதாக முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின்போது முருகனின் காவி உடையை காவலர்கள் பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முருகன் தற்போது வெள்ளை நிற சிறைவாசிகள் உடை உடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிறையில் உள்ள நளினி-முருகனை அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று முன்தினம் (டிச. 14) சந்திக்க வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேட்டியளித்த அவர், "முருகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவரை மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.