வேலூர் மாவட்டம், விஸ்வநாத நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வார்டு வரையறை என்ற பெயரில் தங்களது வாக்குரிமையை மாவட்ட நிர்வாகம் பறிப்பதாகக் கூறி கையில் பதாகைகளுடன் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட தொடங்கினர்.
அதுமட்டுமல்லாமல், தங்களது அடையாள அட்டைகளை தரையில் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள், "விஸ்வநாத நகர் மாநகராட்சியின் 48ஆவது வார்டிலிருந்து வந்ததால் இதுவரை நாங்கள் அந்த வார்டுக்குட்பட்ட பகுதியிலேயே வாக்களித்து வந்தோம். இந்நிலையில், வார்டு வரையறை என்ற பெயரில் திடீரென எங்கள் பகுதியை மாவட்ட நிர்வாகம் 58ஆவது வார்டுக்கு மாற்றிவிட்டது. இதனால் நாங்கள் வாக்களிக்க மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை அலைந்துச் செல்ல வேண்டியுள்ளது.
வார்டு வரையறையென எங்களது வாக்குரிமைகளை மாவட்ட நிர்வாகம் பறிக்கிறது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்" என்றனர். தொடர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சில மணி நேரம் சலசலப்பு நிலவியது.
இதையும் படிங்க: கல்வி அலுவலக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை!