வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 26) காலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
எதையும் மதிக்காத கர்நாடகா
அப்போது, “கர்நாடகா எதைத்தான் மதித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பையும் அவர்கள் மதிப்பது இல்லை, உச்ச நீதிமன்றம் மாற்றிக்கொடுத்த தீர்ப்பையும் மதிப்பதில்லை.
ஆக சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் மதிக்கமாட்டோம் என்று கூறி வருகின்றனர். எல்லா இடங்களிலும் பெரிய 'ராபரியே' நடைபெற்றுள்ளது. இவற்றை எல்லாம் ஆதாரத்தோடு வெளியே கொண்டு வருவோம்.
தடுப்பணைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 90 அணைகள் உள்ளன. இவற்றில் முக்கிய ஆறுகளின் குறுக்கே அணைகள் போதிய அளவில் கட்டப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியுள்ளோம்.
இப்படியாக தண்ணீரை தேக்குவதன் மூலம் சுற்றுவட்டார மக்களுக்கு நீர் ஆதாரங்கள் உறுவாகும் என்ற காரணத்தால் எங்கள் கவணம் முழுவதையும் தடுப்பணைகள் கட்டுவதிலேயே காட்டி வருகிறோம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தோடும் நீர் ஆதாரம் சார்ந்த பிரச்னைகள் உள்ளதால், இருக்கின்ற பிரச்னையை தீர்த்துக்கொண்டால் போதும் என்றுதான் உள்ளோம்.
கடந்த ஆட்சியில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்ததோடு சரி, எந்த ஏரியிலும் வேலை செய்ததாக அவர்கள் காண்பிக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் முறைப்படி ஏரிகள் சீரமைக்கப்படும். மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கப்படும்.
லாட்டரி சீட்
இந்த ஆட்சியில் குற்றம் கூற எதுவும் இல்லாத காரணத்தால், இல்லாத ஒரு கற்பனையை பேசிவருகிறார். இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடுகிறார்” என்றார்.
அமைச்சர் துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் அரசு மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'எதெது எப்போ நடக்குமோ, அதது அப்போ நடக்கும்' என்றார்.
இதையும் படிங்க: அடுத்த மூவ் என்ன? ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா!