வேலூர்: கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராய விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த குருமலையில் உள்ள நச்சுமேடு மலைகிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான மூன்று காவலர்கள் நச்சுமேடு பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.
சாராயம் காய்ச்சுவதாக அறியப்பட்ட இளங்கோ, செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு காவல் துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் அழித்துள்ளனர். பின்னர் செல்வம், இளங்கோ ஆகிய இருவர் இல்லாததால் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதனிடையே சாராய சோதனைக்கு வந்த காவலர்கள், செல்வம், இளங்கோ ஆகியோர் வீட்டில் நுழைந்து வீட்டில் இருந்த சுமார் 8.5 லட்சம் ரொக்கம், 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் அவர்களை ஊரை விட்டு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் எடுத்ததாக கூறப்பட்ட பணம், நகையை செல்வம், இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம், நகைகளை காவல் துறையினர் எடுத்து சென்றதாக பொது மக்கள் தெரிவித்த புகாரையடுத்து அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:காவலருடன் பெண் வழக்குரைஞர் வாக்குவாதம் செய்த விவகாரம்: முன் ஜாமீன் தள்ளுபடி!