வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே உள்ள சிவநாதபுரம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரயூர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சாராயம் வைத்திருந்த நபர்
அப்போது அவ்வழியே 'சொமாட்டோ' டீசர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 'நான் சொமாட்டோ நிறுவன ஊழியர், உணவு டெலிவரி செய்வதற்காக வந்தேன்' என்று கூறியுள்ளார்.
உடனே காவல் துறையினர் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளனர். அப்போது அவர் 'இப்போது தான் நேரடியாக வீட்டிற்குச் சென்று ஆர்டர் எடுக்கச் செல்ல உள்ளேன்' என்று தெரிவித்தார். சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். அதில், கள்ளச்சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சாராயம் வாங்கிச் சென்ற அந்த நபர் காட்பாடி, காந்தி நகரைச் சேர்ந்த விஷ்ணுராம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சாராயம் வாங்கி வந்ததை ஒப்புக் கொண்டார்.
மேலும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள்
இதுகுறித்த தகவல் நேற்று (ஜூன் 2) வேலூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நபர் உண்மையாகவே சொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரிகிறாரா? எதற்காக வந்தார்? என்பது போன்ற கேள்விகளை வேலூர் செய்தியாளர்கள் எழுப்பினர்.
இதனையடுத்து மீண்டும் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.