வேலூர் மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு காவல் துறையினர் அழைத்து செல்லப்பட்டார். பேரறிவாளனை வரவேற்க வீட்டின் வாசலில் காத்திருந்த அவரது தாயார் அற்புதம்மாள், உறவினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் சிரித்தபடி வீட்டின் வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்துவிட்டு தனது வீட்டிற்குள் சென்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:
பேரறிவாளன் இரண்டாவது முறையாக பரோலில் வந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தனது மகனின் 28 ஆண்டுகால வாழ்க்கை அழிந்துவிட்டது. இரண்டு முறை பரோல் கிடைக்க உறுதுணையாக இருந்த அரசுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். நிச்சயமாக அரசு விரைவில் எனது மகன் உட்பட இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் விடுதலை வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார் கூறியதாவது:
‘பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 78 வயதானதால் தொடர்ந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார். தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை பார்க்கவே பேரறிவாளன் பரோலில் வந்துள்ளார்.
பேரறிவாளன் நிறந்தரமாக விடுதலையானலே அவரது தந்தை முழுவதுமாக குணமடைவார் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகையால் விடுதலை கோரிக்கையை தொடர்ந்து வைப்போம். பேரறிவாளனும் நீதிமன்ற கதவை தொடர்ந்து தட்டி வருகிறார்.
அண்மையில் கூட புதிதாக வழக்கு போட்டுள்ளோம் அந்த வழக்கில் கூட எங்களுக்கு சாதகமான நிலைதான் போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற மிகப் பெரிய நம்பிக்கையில் உள்ளோம். 2ஆம் முறை பரோல் வழங்கிய அரசுக்கு குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: 30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!