வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இதுவரை 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலும் தண்டோரா மூலம் மக்களை எச்சரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், "கரோனா வைரஸ் காட்டு தீ போல் பரவி வருவதால் சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
மேலும், அதன் முடிவு வரும் வரை வீட்டில் தனித்திருக்க வேண்டும். இவர்கள் குறித்து அண்டை வீட்டாரும் 9498035000 என்ற ஆட்சியரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்காமல், சென்னையில் இருந்து வந்து தங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர் தண்டோரா மூலமும், காவல் துறையினர் காவல் வாகனம், ஆட்டோ மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்றில் முதன்மை தொடர்பில் உள்ளவர்கள், இரண்டாம் நிலைத் தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களை வரும் 27ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகளில் சுணக்கம் காட்டும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி!