நிவர் புயல் புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் நேற்றிரவு முதல் இன்று காலைக்குள் திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளை புயல் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நிவர் புயலின் மையப்பகுதி வேலூரை நெருங்கியபோது காற்றின் வேகம் அதிகமானதுடன் கனமழை பெய்துவந்தது. தற்போது மழை சற்று தணிந்து காற்றின் சீற்றமும் குறைந்துள்ளது. வேலூரில் 381.70 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வேலூர் கூட்டுறவுச் சக்கரை ஆலை பகுதியில் அதிகபட்சமாக 82.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்மழையின் காரணமாக பெரும்பாலான ஏரி, குளங்கள் நிறைந்தன.
பாலாற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முனிவேல் என்பவரின் வீட்டின் செங்கல் சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இருப்பினும் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் குடிசை வீடுகள் காற்றினால் சேதமடைந்தன. அதுமட்டுமின்றி 14 ஏக்கருக்குப் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் புயல் காரணமாக முறிந்து விழுந்துள்ளன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளன. இதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர், களப்பணியாளர்கள், காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் வேலூர் மாவட்ட வருவாய்த் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்புத் துறையினர் வேலூர், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்து-வருகின்றனர்.