முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் இருக்கும் நளினிக்கும், சக கைதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, பெண் சிறை காவலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, நளினி தனது துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தியை தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு கேட்ட போது, சிறையில் சக கைதியுடன் நளினி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது சிறை காவலர் ஒருவர் தலையிட்டதால், தற்கொலை செய்து கொள்வதாக நளினி கூறியதாக குறிப்பிட்டார்.
நளினியின் தற்கொலை முயற்சியை விரைவாக சிறை காவலர்கள் தடுத்ததால் எந்த வித அசம்பாவிதமுமின்றி நளினி பாதுகாப்பாக சிறையில் உள்ளதாக சிறை துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் சமூக பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை - எய்ம்ஸ்