முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி அவரது கணவர் முருகன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினியும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் ஜூலை 25ஆம் தேதி வெளியே வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிடர் கழக நிர்வாகி சிங்கராயர் இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சந்திப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நளினி தனது கணவர் முருகனை சந்தித்து பேசினார். பின்னர் மீண்டும் நளினியை, காவல்துறையினர் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.
நளினி சிறையில் இருக்கும்போது மாதம் இரண்டு முறை தனது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். பரோலில் வெளியே வந்த நளினி முதன்முறையாக கணவரை சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து, தனது மகள் திருமண ஏற்பாட்டில் தீவிரம் கட்டி வரும் நிலையில் பரோல் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.