முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், இலங்கையில் உள்ள தனது தாயுடனும், வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடனும் வீடியோ காலில் பேச அனுமதிக்கக்கோரி கடந்த 1ஆம் தேதி முதல் 27 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார்.
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் முருகனிடம், சிறைத்துறை அலுவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்நிலையில், இன்று சிறைக் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இளநீர் குடித்து தன்னுடைய உண்ணாவிரதத்தை முருகன் முடித்துக்கொண்டார்.
முருகனின் சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால் சிறை வளாகத்தில் உள்ள கோயிலுக்குச் செல்லவும், இவரது கணக்கில் பொருள்கள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடைகள் தற்போது விலக்கப்பட்டுள்ளதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். மற்ற கோரிக்கைகளை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளும்படி சிறைத்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:உயிருக்குப் போராடும் தந்தையுடன் பேச முருகன் கோரிக்கை!