வேலூர் மாவட்டம் காட்பாடியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் தவணை கரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான சிறப்பு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜுன்.14) நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அரசு அலுவலர்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக பாலாற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்பெண்ணையில் மழை காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை பாலாற்றில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை உடைத்து அங்கிருந்து தண்ணீர் எடுத்து செல்லும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
நீர்வரத்து கால்வாய்களில் செல்லும் தண்ணீர் கடைமடை வரை சென்ற பிறகு, அலுவலர்களே தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு திருப்பி விடுவார்கள். எனவே நீர்வரத்து கால்வாய்கள் யாரும் உடைப்பை ஏற்படுத்த வேண்டாம்.
அரசு நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அரசு கேட்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அணைக்கட்டு அருகே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல் அரசம்பட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகிகள் 15 பேர் நீக்கம்!