வேலூர்: இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா செல்லியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று (மே.15) நடைபெற்றது.
இந்த விழாவில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு, வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்ற அசோகன் மற்றும் உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது வேலூர் உள்பட 3 மாவட்டங்களில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் 12 மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்பது அரசு நிகழ்ச்சியாகும், இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது மிகவும் வேதனைக்குரியது. அமைச்சர்கள் பங்குபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது கட்டாயமாகும். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும்.
மேலும், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சாதி பாகுபாடின்றி கோயில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களைத் திருடுபவர்களையும், குடித்துவிட்டு கோயிலுக்குள் வருபவர்களையும் கோயில் அறங்காவலர்களாக நியமனம் செய்யாமல் பக்தியோடு இருப்பவர்களைக் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.