வேலூரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ரூ.21 லட்சம் மதிப்பிலான வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் சென்று கொண்டிருந்தது.
அப்போது, லாரி ஓட்டுநர் துரை உணவு அருந்துவதற்காக வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளார். உணவு அருந்தி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் லாரி உரிமையாளருக்கும் ரத்தினகிரி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டு லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று கண்காணிக்கப்பட்டது. அப்போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே லாரி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் லாரியை மடக்கி, அதிலிருந்து வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்(எ) ராம்குமார்(22), ஹனிஸ்(22), விருதம்பட்டை சேர்ந்த பார்த்தீபன்(25), முத்துமண்டபத்தைச் சேர்ந்த லோகேஷ்(21), நேதாஜி நகர் அசோக்குமார் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதில் முக்கிய குற்றவாளியான யாசின் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். யாசின் வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு வேளாண் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்தான் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவன் என்பதும், ஏற்கனவே ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் என சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை இந்தக் கும்பல் கடத்தியதும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களை தொடர்ந்து வேலூரிலும் காவல்துறையால் கைது செய்யப்படும் நபர்கள் பாத்ரூமில் வழுக்கி விழும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், கால் மற்றும் கைகளில் பலத்த அடிபட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.