வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கொட்டாவூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியனின் மனைவி யுவராணி (23), பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, 108 கட்டுப்பாடு அறைக்கு இன்று (பிப்.16) அதிகாலை 1:32 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அணைக்கட்டு பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த மருத்துவ உதவியாளர் ஜெயலஷ்மி மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்று, பிரசவ வலியில் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி யுவராணியை வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே, கொட்டாவூர் கிராமத்தைக் கடந்து செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகரித்ததைத் தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமியே யுவராணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியுள்ளது. ஜெயலட்சுமி கவனமாக பிரசவம் பார்த்ததை அடுத்து இன்று அதிகாலை 2:20 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து, வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க:வசந்த பஞ்சமி - பாட்டியை நினைவுகூர்ந்த பிரியங்கா காந்தி!