வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தக ஆதரித்து பரப்புரை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்கள், சிலை கடத்தலில் நாங்கள் இருவரும் ஈடுபட்டுள்ளதாக இன்று கலைஞர் செய்தி தொலைக்காட்சியில் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், நாங்கள் சிலை கடத்தலில் ஈடுப்பட்டதாக எந்த ஒரு அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அரசியல் காழ்புணர்வின் காரணமாக இல்லாத ஒன்றை செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
எந்த உண்மையும் ஆராயாமல், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பரப்பிய செய்தியை நம்பி பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். பொதுவாக தமிழ்நாடு அரசின் மேல் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த தவறான செய்தியை பரப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டரீதியான வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். இது போன்ற ஆதாரமில்லாத தகவல்களை பரப்பியதால் பிரஸ் கவுன்சிலிலும் புகார் அளிக்க உள்ளோம்.
கலைஞர் செய்தி தொலைக்காட்சி எந்தவித ஆதாரமும் இல்லாத இந்த பொய் செய்திகளை வெளியிட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.