வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் கலில் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர் ஒரு வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது காவல்நிலைய வாசலில் திடீரென சுரேஷ் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். காவல்துறையினர் அவரை மீட்டு வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் ஆகியோர் காவல் நிலைய ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் பற்றி காவல்துறை அலுவலர் கூறுகையில், சுந்தர்ராஜன் என்பவர் தனது டிரைவிங் ஸ்கூலில் சுரேஷ் மற்றும் கலில் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டி ரூ1.50 லட்சம் வாங்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தோம். அவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து சுரேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் நேற்று இரவு மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டுள்ளார் அந்த உணவு ஒத்துழைக்காமல் சுரேஷ் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சுரேஷ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு! - உறவினர்கள் போராட்டம்